தினமலர் 25.03.2010
காஞ்சியில் அனுமதியின்றி பேனர் வைத்தால்…கடும் நடவடிக்கை!:நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, காஞ்சிபுரம் நகராட்சி கமிஷனர் மகாலட்சுமிதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழ்நாடு நகர்ப்புற விளம்பரங்கள் அனுமதித்தல், விளம்பர வரி விதித்தல், விளம்பர வரி வசூலித்தல் விதிகள் 2003ன் படி விளம்பரங்கள் அமைக்க, கலெக்டரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி விளம்பரங்கள் அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.
எனவே, காஞ்சிபுரம் நகர எல்லைக்குள் கலெக்டரின் முறையான அனுமதியின்றி எவ்விதமான விளம்பரங்களும் (தட்டிகள், போர்டுகள், டிஜிட்டல் பேனர்கள் போன்றவை) அமைக்கக் கூடாது. அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரங்கள், முன் அறிவிப்பின்றி நகராட்சியால் அப்புறப்படுத்தப்படும். அதற்கான செலவினங்கள் விளம்பரதாரர்களிடம் வசூலிக்கப்படும்.
அனுமதியின்றி விளம்பரங்கள் வைப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்படுகின்றன. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் பொருட் கள் உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நகராட்சி கமிஷனர் மகாலட்சுமி தேவி தெரிவித்துள்ளார்.