தினமணி 08.11.2009
காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டம்
ஆறுமுகனேரி, நவ. 7: காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் வாவு எஸ்.செய்யிது அப்துற் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் காயல்பட்டினம் 1-வது வார்டு கடையக்குடி, அருணாசலபுரம் தெற்கு பகுதியிலும், 13-வது வார்டு விசாலட்சுமி அம்மன் கோவில் தெரு இசக்கி அம்மன் கோவில் பின்புறம் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணி செய்திட முடிவு செய்யப்பட்டது.
7-வது வார்டு கற்புடையார் பள்ளி வட்டம், கீழ நெய்னார் தெரு ஆகிய பகுதிகளில் மின் கம்பங்களில் மின்விளக்குகள் இல்லாத இடங்களில் மின் விளக்குகள் அமைத்திட தீர்மானிக்கப்பட்டது.
பேருந்து நிலையத்தின் நுழைவுப் பகுதி மற்றும் அல்ஜாமி உல் அஸ்ஹர் ஜூம்ஆ பள்ளி, ஸிகஸ்டம்ஸ் சாலை சந்திப்பிலும் போக்குவரத்து மேலாண்மை திட்டத்தில் 75 சதவிகித மானியத்தில் 25 சதவிகிதம் நகராட்சி பொது நிதியிலும் ரூ.10 லட்சத்தில் 2 அடி உயர் கோபுர மின்விளக்குகள் அமைத்திட தீர்மானிக்கப்பட்டது.
2008-2009 மற்றும் 2009-2010 நிதி ஆண்டில் நகராட்சிக்கு ரூ. 75 லட்சம் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ஒதுக்கப்பட்டது. அதில் இதர பணிகளுக்கு ஒதுக்கீடு செய்த ரூ.10 லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்தபின் மீதமுள்ள தொகையான ரூ. 3.04 லட்சம் மற்றும் நகராட்சி பொது நிதியிலிருந்து அழகாபுரி பிரதான சாலையில் இருந்து ஓடக்கரை கோயில் வரையில் உள்ள 40 சோடியம் மின் விளக்குகளை அகற்றி சோடியம் குழல் விளக்குகள் அமைத்திட தீர்மானிக்கப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி பகுதியிலுள்ள நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் மற்றும் பட்டுப்போன மரங்களையும் அகற்ற சம்பந்தப்பட்ட துறையினரை கேட்டுக்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணைத் தலைவர் கசாலி மரைக்கார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.