தினமலர் 03.06.2010
கார்பைட்‘ கல் மாம்பழம் பறிமுதல்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி
நாமக்கல்: “கார்பைட்‘ கல் மூலம் பழுக்க வைத்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ மாம்பழங்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
மாம்பழ சீஸன் துவங்கி உள்ளதால், பல்வேறு பகுதியில் விளைந்த மாங்காய், விற்பனைக்காக மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. மாங்காயை மொத்த விலைக்கு டன் கணக்கில் வாங்கும் வியாபாரிகள், அதை குடோன்களில் வைத்து பழுக்க வைக்கின்றனர். பழுக்க வைத்த மாம்பழங்கள் ரகத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்கப்படுகிறது. வியாபாரிகள் சில ஆண்டுகளாக மாங்காய்கள் செயற்கையான முறையில் பழுக்க வைத்து, விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குடோனில் குவித்து வைக்கப்படும் மாங்காய்களுக்குள், கார்பைட் கல்லை சிறு சிறு பொட்டலங்களாக பேப்பரில் கட்டி வைக்கின்றனர். அதில் இருந்து வெளியேறும் வெப்பத்தால், காய்கள் ஒரு சில நாட்களில் பழுத்து விற்பனைக்கு தயாராகிறது. அவற்றை உடனுக்குடன் விற்பனை செய்து கல்லா கட்டிவிடுகின்றனர் வியாபாரிகள். அந்தப்பழங்கள் இயற்கையான முறையில் பழுத்த பழங்களைப் போல் அல்லாமல், சுவை குறைந்திருக்கும். மேலும், அவற்றை சாப்பிடுவதன் மூலம் வயிற்று போக்கு போன்ற உபாதைகளும் ஏற்படும். நாமக்கல் பகுதியில் “கார்பைட்‘ கல் பயன்படுத்தி மாங்காய் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக நகராட்சி அலுவலகத்துக்கு தகவல் வந்தது.
அதை தொடர்ந்து கமிஷனர் (பொறுப்பு) முகமது மூசா தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் உதயகுமார், காசிநாதன் மற்றும் அலுவலர்கள் நாமக்கல் கோட்டைசாலை தினசரி மார்க்கெட் அருகில் உள்ள குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, “கார்பைட்‘ கல்லை பயன்படுத்தி பழுக்க வைத்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ மாம்பழங்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்து அழித்தனர். இது குறித்து கமிஷனர் (பொறுப்பு) முகமது மூசா கூறியதாவது: “கார்பைட்‘ கல் வைத்து செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப் போக்கு முதலில் ஏற்படும். அப்பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். வியாபாரிகள் லாப நோக்கோடு இத்தகைய குறுக்கு வழியை பின்பற்றுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை வியாபாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.