தினமணி 6.11.2009
காலாவதி பொருள்கள்: ராசிபுரம் கடைகளில் அதிகாரிகள் சோதனை
ராசிபுரம், நவ. 5: ராசிபுரம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான பொருள்கள் குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ராசிபுரம் நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் கலப்பட டீத்தூள், காலாவதியான உணவுப் பொருள்கள், அளவு குறைபாடு போன்றவை குறித்து புகார்கள் வந்தன. இதனையடுத்து சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள், உணவுப் பொருள்கள், காரவகைகள், அழுகிய காய்கறிகள், கடைகளில் பயன்படுத்தப்பட்ட மானிய விலை காஸ் சிலிண்டர், முத்திரையிடப்படாத தராசு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
ராசிபுரம் வட்டாட்சியர் கு.ராதாமணி, சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் திருஞானம், நகராட்சி ஆணையர் வே.மாணிக்கவாசகம், வட்ட வழங்கல் அலுவலர் ஜி.ராஜா, முத்திரை ஆய்வாளர் எஸ்.சீனிவாசன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஜி.கந்தசாமி, தனி வருவாய் ஆய்வாளர் லோகநாதன், ஸ்ரீதர், துப்புரவு ஆய்வாளர்கள் லோகநாதன், பாஸ்கர், பிரகாஷ் உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.