தின மணி 23.02.2013
சென்னையில் கால்வாய், ஓடை, கூவம் ஆறு, அடையாறு போன்ற நீர்வழிப்பாதைகளின் ஓரங்களில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு கொசு வலைகள் இலவசமாக வழங்க மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், கொசுக்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் குடிசை வாழ் ஏழை மக்களுக்கு இலவச கொசு வலைகள் வழங்கப்படும் என்று மாமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தீர்மான விவரம்: கொசுக்கள் உற்பத்தியாகும் தொட்டிகள், கிணறுகள் ஆகியவற்றில் வாரம் ஒருமுறை கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாக வழிவகுக்கும் பொருள்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சென்னையில் கொசுக்களை ஒழிக்க இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நீர்வழிப்பாதை ஓரங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடிசை வாழ் மக்களுக்கும், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும் இலவசமாக கொசு வலை வழங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இவ்வாறு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் இலவச கொசு வலைகள் விரைவில் வழங்கப்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.