காவேரிப்பாக்கம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் போட்டியின்றித் தேர்வு
வேலூர், ஜன. 3: காவேரிப்பாக்கம் பேரூராட்சி, 5-வது வார்டு உறுப்பினராக திமுக வேட்பாளர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டத்தில் 3 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 1 பேரூராட்சி வார்டு உறுப்பினர், 6 ஊராட்சித் தலைவர்கள், 28 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான இடைத் தேர்தல் இம்மாதம் 10-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 22-ம் தேதி முதல் 29-ம் தேதிவரை நடைபெற்றது. 30-ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற கடைசி நாளாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
மனு தாக்கல் இல்லை:
இவற்றில், மேல்விஷாரம் மூன்றாம் நிலை நகராட்சி 4,5,6-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், திமிரி ஒன்றியம், செய்யாத்துவண்ணம் ஊராட்சிக்கும் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. வார்டு உறுப்பினர் பதவிக்கான காலியிடங்களில் 8 இடங்களுக்கு யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.
தேர்தல்:
காவேரிப்பாக்கம் 5-வது வார்டுக்கு திமுகவை சேர்ந்த எம். சரளா மட்டுமே மனு தாக்கல் செய்திருந்ததால், அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புங்கம்பட்டுநாடு, சாத்துப்பாளையம், விண்ணம்பள்ளி, சேக்கனூர், பல்லேரி ஆகிய 5 ஊராட்சித் தலைவர் பதவிக்கு 32 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 20 ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 34 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
புங்கம்பட்டுநாடு ஊராட்சித் தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்த 8 பேரில் 7 பேர் திங்கள்கிழமை தங்கள் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டதால், ஊராட்சித் தலைவராக அ. விஜயா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சாத்துப்பாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்த 6 பேரில் 2 பேர் மனுவை திரும்பப் பெற்றதால், 4 பேர் களத்தில் உள்ளனர்.
விண்ணம்பள்ளி ஊராட்சித் தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்த 9 பேரில் 3 பேர் மனுவை திரும்பப் பெற்றதால், 6 பேர் களத்தில் உள்ளனர். சேக்கனூர், பல்லேரி ஊராட்சியில் தலா ஒருவர் தங்களது மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இப்போது சேக்கனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 3 பேரும், பல்லேரி ஊராட்சித் தலைவர் பதவிக்கு 4 பேரும் களத்தில் உள்ளனர்.
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்: ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்தவர்களில் 7 பேர் தங்கள் மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து 15 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 5 இடங்களுக்கு நடைபெறும் போட்டியில் 12 பேர் களத்தில் உள்ளனர்.