தினமணி 23.04.2010
கிழக்கு, வடக்கு மண்டலங்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை
கோவை, ஏப்.22:கோவை மாநகராட்சி கிழக்கு, வடக்கு மண்டலங்களில் சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஆர்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு, வடக்கு மண்டலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை சமாளிப்பது தொடர்பாக மேயர் வெங்கடாடசலம் தலைமையில் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை மேயர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மேயர் வெங்கடாசலம் பேசும்போது, “பில்லூர் அணைக்கட்டு பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் தான் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இனி வரும் காலங்களில் மின்தடை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அப்படியே மின்தடை ஏற்பட்டாலும் மக்கள் நலன் கருதி சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நீர்க்கசிவு ஏற்படும் பகுதிகளை அதிகாரிகள் உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும் என்றார்.
தமிழ்நாடு மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் அனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அமரநாதன், முதன்மைப் பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியம் (பில்லூர்), கோபாலகிருஷ்ணன் (சிறுவாணி), மாநகராட்சி குடிநீர்ப் பிரிவு உதவிப் பொறியாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.