தினமணி 10.12.2009
கீழ்கொடுங்காலூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் முடிவடையும்
வந்தவாசி, டிச.9: வந்தவாசியை அடுத்த பெருநகர் ஆற்றிலிருந்து கீழ்கொடுங்காலூர் வழியாகச் செல்லும் ரூ.5 கோடி மதிப்பிலான கீழ்கொடுங்காலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் விரைவில் முடிவடையும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலையொட்டி, புன்னை, ஓசூர் கிராமங்களில் புதன்கிழமை நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டங்களில், அமைச்சர் எ.வ.வேலு பேசியது:
மங்கலம் மாமண்டூர் கூட்டுச் சாலையிலிருந்து அதியனூர் வழியாக பாதூர் வரை ரூ.1.50 கோடி செலவில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
எளிமையாக வாழ்ந்த எஸ்.பி.ஜெயராமனின் மகன் ஜெ.கமலக்கண்ணனுக்கு போட்டியிடும் வாய்ப்பை கருணாநிதி வழங்கி உள்ளார்.
ஆகவே அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைக்க நாம் பாடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு திமுக ஒன்றியச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் விஷ்ணுபிரசாத், நரசிம்மன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.