தினமலர் 08.04.2010
குடிநீர் ஆதாரங்கள் கணக்கெடுப்பு பற்றாக்குறையை போக்க அரசு தீவிரம்
சிவகங்கை : கோடையில் பற்றாக்குறையை போக்க, குடிநீர் ஆதாரங்களின் நிலை குறித்த கணக்கெடுக்குமாறு கலெக்டர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பொய்த்தது. கோடையின் தாக்கத்தால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது. பற்றாக்குறையை தவிர்க்கும் முயற்சியில், அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.கணக்கெடுப்பு: இதன்படி குடிநீர் திட்டங்கள், ஆதாரங்கள், செயலற்று கிடப்பவை குறித்த விபரங்களை அனுப்ப கலெக்டர்களுக்கு, முதல்வரின் செயலர் (கண்காணிப்பு) சோமநாதன் அறிவுறுத்தியுள்ளார். ”கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது, என்பதில் முதல்வர் தனிக்கவனம் செலுத்துகிறார். இதன் முதற்கட்டமாக, உள்ளாட்சி, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டங்கள்; ஆழ்துளைகளில் நீரின் மட்டம்; பழுதடைந்துள்ள ஆழ்துளைகள்; மேல்நிலை, தரைமட்ட தொட்டிகளின் நிலை குறித்து, துல்லியமாக வழங்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.
மும்முரம்: இதையடுத்து, உள்ளாட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குடிநீர் ஆதாரங்களின் நிலை குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இரு நாட்களுக்குள் அறிக்கை வழங்குமாறு, முதல்வரின் செயலர் உத்தரவிட்டுள்ளார். இதை ஆய்வு செய்து, கோடையில் குடிநீர் பற்றாக்குறையை போக்க, அரசு நிதி ஒதுக்கும்,” என்றார்.