தினமணி 05.07.2013
தினமணி 05.07.2013
குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால் அபராதம்
திருத்தங்கல் நகராட்சிப் பகுதியில் குடிநீர்
இணைப்பில், மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால் ரூ. 12,500 அபராதம்
விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  
   திருத்தங்கல் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 3,570 குடிநீர்
இணைப்புக்கள் உள்ளன. தவிர 97 பொதுக் குழாய்கள் உள்ளன. நகராட்சிக்கு மானூர்
குடிநீர் திட்டத்தின்கீழ் தினசரி 30 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட
வேண்டும். ஆனால் 14 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வழங்கப்படுகிறதாம்.
   எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த
அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து வியாழக்கிழமை நகர்மன்ற
உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட  கலந்துரையாடல் கூட்டம், நகராட்சி
அலுவலகத்தில் நடைபெற்றது. 
   குடிநீர் இணைப்பு பெற்றிருப்பவர்கள், குடிநீர் இணைப்பில் மின்
மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால் ரூ. 12,500 அபராதம் விதிக்கப்படும் என
அச்சடித்த துண்டு பிரசுரங்களை வழங்கி, அதை பெற்றுக்கொண்டதற்கான கையப்பமும்,
 வீட்டு உரிமையைளரிடம் பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
   ஜூலை 8-ஆம் தேதி முதல் குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி
தண்ணீர் எடுத்தால், மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும் என கூட்டத்தில்
முடிவு செய்யப்பட்டது. இதற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் வரவேற்பு
தெரிவித்தனர்.   கூட்டத்தில் நகர்மன்றத் துணைத் தலைவர் பொ. சக்திவேல்,
பொறியாளர் ராமலிங்கம், பணி மேற்பார்வையாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.