தினமலர் 01.04.2010
குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் கொண்டு தண்ணீர் எடுப்பதை தடுக்க வேண்டும் : புளியங்குடி கவுன்சிலர் வலியுறுத்தல்
புளியங்குடி : குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் கொண்டு தண்ணீர் உறிஞ்சி எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புளியங்குடி நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.,கவுன்சிலர் கேட்டுக் கொண்டார். புளியங்குடி நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் டாக்டர் துரையப்பா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் முகம்மது இஸ்மாயில், கமிஷனர் செந்தில்முருகன், இன்ஜினியர் முகம்மதுஷரீப் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
ஜோதிமணி: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி உறிஞ்சி எடுப்பதை தடுக்க வேண்டும்.
ஆறுமுகச்சாமி: புளியங்குடி மக்கள் மின்கட்டணத்தை செலுத்த மின்சார வாரிய அலுவலகம் செல்கின்றனர். அங்கு பஸ் ஸ்டாப் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆணையாளர்: இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலகிருஷ்ணன்: கற்பக வீதிக்கு மேற்கே உள்ள குடிநீர் தொட்டியில் தினமும் பலர் குளிக்கின்றனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இன்ஜினியர்: நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜாகீர்உசேன்: நகராட்சி சார்பில் நடைபெறும் விழாக்களுக்கு உறுப்பினர்களுக்கு கூட அழைப்பிதழ் அனுப்புவதில்லை ஏன்?
இன்ஜினியர்: இதுபோன்ற தவறுகள் வருங்காலங்களில் ஏற்படாது.
சுகிர்தராஜன்: வண்ணாந்துறை கிணற்றில் இருந்து கடந்த மூன்று நாட்களாக மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் வரவில்லை ஏன்?
ஓவர்சியர்: அந்த பணியில் இருந்தவர் விடுப்பில் சென்றதால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சுகிர்தராஜன்: குடிநீர் வினியோகத்தில் தவறு செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: தவறு செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.