தினமணி 21.08.2009
குடிநீர் இணைப்பில் முறைகேடாக பொருத்தப்பட்டிருந்த மோட்டார்கள் பறிமுதல்
திருநெல்வேலி, ஆக. 20: திருநெல்வேலியில் குடிநீர் இணைப்பில் முறைகேடாக பொருத்தப்பட்டிருந்த 6 மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சில கடைகளிலும், வீடுகளிலும் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு குடிநீர் உறிஞ்சப்படுவதாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மின் மோட்டார்கள் பொருத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் விளைவாக, திருநெல்வேலி மாநகர பொறியாளர் ஜெய் சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை பாளையங்கோட்டை பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இச் சோதனையில் 6 வீடுகளில் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டு, அந்த மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல திடீர் சோதனைகள் இனி அடிக்கடி நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் த. மோகன் எச்சரித்துள்ளார்.