குடிநீர் இணைப்பு துண்டிப்பு தவிர்க்க அவசரமாக பணம் செலுத்திய மக்கள்
உடுமலை: வரி நிலுவை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கஅதிகாரிகள் வந்தனர்.
அதைத்தொடர்ந்து வீட்டு உரிமையாளர்கள் அவசரம் அவசரமாக பணம் கட்டினர். உடுமலை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா கூறியதாவது:
உடுமலை நகராட்சியில் 2012-13ம் ஆண்டுக்கான வீட்டு வரி மொத்தம் ரூ.2 கோடியே 35 லட்சம். இதில் இதுவரை ரூ.2 கோடியே 23 லட்சம் வசூலாகியுள்ளது. மீதி ரூ.11 லட்சத்து 99 ஆயிரம் வசூலாக வேண்டும். குடிநீர் வரி மொத்தம் ரூ.77 லட்சத்து 81 ஆயிரம். வசூலானது 76 லட்சத்து 81 ஆயிரம். இன்னும் ரூ.1 லட்சம் வசூலாக வேண்டும்.
கடந்த ஆண்டு 100 சதவீத வசூல் இலக்கை உடுமலை நகராட்சி எட்டியது. தற்போது 99 சதவீதம்தான் வசூலாகி உள்ளது. வரும் 31ம்தேதிக்குள் வரி நிலுவையை மக்கள் செலுத்திவிட வேண்டும்.
இல்லாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு கூறினார்.
நீண்ட நாட்களாக குடிநீர் வரி கட்டாத 15 வீடுகளுக்கு இணைப்பு துண்டிக்க நகராட்சி அதிகாரிகள் நேற்று சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர்கள் உடனடியாக வரி பாக்கியை அந்த இடத்திலேயே செலுத்தினர்.