தினகரன் 27.03.2013
குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவை வைத்திருந்ததால் குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் நேற்று துண்டித்தனர்.
திருப்பூர் மாநகராட்சியில் வரியினங்கள் வசூல் செய்யும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், குடிநீர் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி வசூலில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வரி செலுத்தாமல் பல ஆண்டுகளாக நிலுவை வைத்திருப்போரின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேவிஆர் நகர் மெயின் ரோடு பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் நேற்று துண்டிக்கப்பட்டன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வரி செலுத்தாத 10க்கும் மேற்பட்டோரின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. குடிநீர் இணைப்புகள் துண்டிக்கும் இன்றும் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.