குடிநீர் கட்டணம் நிலுவை பேரூராட்சி வேண்டுகோள்
கம்பம்:பல லட்சம் ரூபாய் குடிநீர் கட்டணம் நிலுவையாக இருப்பதால், நிர்வாகத்தை நடத்துவதில் சிரமம் இருப்பதாகவும், நிலுவையை செலுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும், என்று காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து விட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் என அனைத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் என்ற நிலை உள்ளது. நகரங்களில் பொதுமக்கள் பெரும்பாலோர், கேன் வாட்டர் வாங்கி உபயோகப்படுத்தும் நிலைக்கு சென்று விட்டனர். பேரூராட்சிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இருந்த போதும், குடிநீர் பைப் லைன் உடைந்தால் பராமரிப்பு செய்வது, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கட்டணம் செலுத்துவது, குளோரின் கலப்பது போன்ற பராமரிப்பு பணிகளை பார்ப்பதில், சிக்கலை சந்தித்து வருகிறது. காரணம், பல லட்சம ரூபாய் குடிநீர் கட்டண பாக்கி வைத்துள்ளனர் மக்கள்.
பொதுமக்கள் குடிநீர் கட்டண பாக்கியை செலுத்த முன்வர வேண்டும், என்று பேரூராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.பேரூராட்சி தலைவர் சாந்திரவீந்திரன் கூறுகையில், “குடிநீர் கட்டண நிலுவையை பொதுமக்கள் செலுத்தினால், இன்னும் குடிநீர் விநியோகத்தில் சரியான நிலைப்பாடு கையாளப்படும், என்றார்.