தினமணி 01.08.2009
குடிநீர் குழாய் பதிக்கும் பணி: ஆணையர் ஆய்வு
சேலம், ஜூலை 31: சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் பழனிச்சாமி வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சி 22-வது வார்டு சேலத்தாம்பட்டி பகுதியில் கடந்த மழைக் காலத்தின்போது, ஏரி நீரை வடியச் செய்ய கால்வாய் வெட்டப்பட்டது. அப்போது குடிநீர்க் குழாய்கள் சேதமடைந்தன.
அவற்றை சரி செய்யாததால் அப்பகுதியில் உள்ள சுமார் 500 குடும்பங்கள் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் அங்குள்ள விஜயராஜ் தெரு, லட்சுமி நகர், மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்காத குடிநீருக்கு கட்டணம் செலுத்துமாறு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், கடந்த 27-ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைக்க ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து ரூ.3.10 லட்சம் செலவில் அந்த பணி நடைபெறுகிறது. இதை ஆணையர் பழனிச்சாமி வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த பணிகள் 10 நாள்களில் நிறைவடையும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.
உதவி ஆணையர் நெப்போலியன், செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.