தினமலர் 17.04.2010
குடிநீர் கோரி சாலை மறியல் செய்ய தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை : மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
சேலம்: ‘சேலம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை காரணம் காட்டி சாலை மறியல் செய்ய பொதுமக்களை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என, கலெக்டர் சந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இயல்பான மழை அளவை விட குறைவாகவே பருவமழை பெய்தது. அதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பது இயல்பானதாகவே இருந்து வந்தாலும், குடிநீர் பற்றாகுறையை போக்க பல்வேறு கட்ட நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. குடிநீர் பற்றாகுறையை சமாளிக்க மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சேலம் மாவட்டத்துக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குடிநீர் பற்றாகுறையுள்ள பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், வீணாக்காமல் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பொதுமக்கள் குடிநீர் விநியோகம் செய்யும் குழாய்களில் சேதமடைந்திருந்தாலோ, குடிநீர் முறையாக விநியோகிக்கப்படாமல் தாமதம் ஏற்பட்டாலோ கலெக்டரிடம் மனுக்கள் கொடுக்கலாம். நீங்கள் கொடுக்கும் மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். அதை தவிர்த்து சேலம் மாநகர மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் போராட்டம் நடத்துவது போன்ற செயல்கள் தவறான அணுகுமுறை என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை காரணம் காட்டி பொதுமக்களை சாலைமறியல் செய்யவும், சட்டம்–ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்திடவும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கவும் தூண்டுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.