தினமலர் 01.04.2010
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை வேண்டும் : மன்னார்குடி நகராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்
மன்னார்குடி: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சிக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். மன்னார்குடி நகராட்சி கூட்டம் தலைவர் கார்த்திகா உத்தமன் தலைமையில் நடந்தது.ஆணையர் மதிவாணன், பொறியாளர் முருகானந்தம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
தம்பிதுரை: கீழவிழல்காரத்தெரு, மேல விழல்காரத் தெரு, தலையான் குட்டை ரோடு ஆகியவை பழுதடைந்துள்ளன. இங்கு புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும். பழைய சுடுகாட்டு ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.
ஆனந்தராஜ்: நகரில் குடிநீர் விநியோகம் சரியாக இல்லை.
ஆணையர்: மின்தட்டுப்பாடு தான் இதற்கு காரணம்.
கலைவாணன்: டெப்போ ரோட்டில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் தொடர்ந்து புகை வந்தபடி உள்ளது. உடன் தீயை அணைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சேகர்: எனது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. ஒத்தைத்தெரு குடிநீர் தொட்டியில் இருந்து 13 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஒரு வார்டுக்கு மட்டும் எப்படி குடிநீர் விநியோகம் ஆகாமல் இருக்க முடியும்.
கார்த்திகேயன்: மின்தட்டுப்பாட்டுக்கும், குடிநீர் விநியோகத்திற்கும் தொடர்பு இல்லை. நிர்வாகக் கோளாறு தான் காரணம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடுகநாதன்: நம்மிடம் எத்தனை மோட்டார்கள் உள்ளன. இதில் எத்தனை பயன்பாட்டில் உள்ளது.
கார்த்திகேயன்: தண்ணீர் தொட்டி முழுமையாக நிரம்பிய பின்னர் தான் குடிநீர் விநியோகத்தை தொடங்க வேண்டும். இப்போது அப்படி தான் நடக்கிறதா?
ஆணையர்: முழுமையாக நிரம்பிய பின்னர் தான் விநியோகம் நடக்கிறது.
பொறியாளர்: ஒரு நாளைக்கு மின்மோட்டார் 21 மணி நேரம் இயங்க வேண்டும்.
அஜ்மைதீன்: எத்தனை மோட்டார்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது.
ஆணையர்: காலையிலேயே மின்தடை ஏற்படுகிறது. மோட்டார்களில் 4 இயங்கினாலும் 12 முதல் 13 மணி நேரம் மின்சாரம் தேவைப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுப்போம்.
சேகர்: காய்கறி மார்க்கெட் பின்புறம் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக சரிசெய்யப்படாமல் உள்ளது.
கோபி: கீழப்பாலம் பூங்கா அருகில் உள்ள ஆழ்குழாய் கிணறும், நீர்த்தேக்கத்தொட்டியும் பெரிதாக அமைக்கப்பட்டால் கூடுதலாக மின்விநியோகம் செய்யலாம்.
வீரகுமார்: எனது வார்டில் உள்ள சிதிலமடைந்த மீன் மார்க்கெட்டை எப்போது சீரமைக்கப்போகிறீர்கள்?
ஆணையர்: நகராட்சி பொது நிதியில் இருந்து விரைவில் மீன் மார்க்கெட்டை கட்டி முடிக்க ஏற்பாடு செய்யப்படும்.
கணேசன்: எனது வார்டில் உள்ள நடுநிலைப்பள்ளி பின்புறம் பொது கழிவறை மிகவும் சீர்கேடான நிலையில் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா: எனது வார்டில் சில இடங்களில் கைபம்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜீவானந்தம்: எங்கள் பகுதியில் உள்ள குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.