தினமணி 08.04.2010
குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு
திருச்சி, ஏப். 7: திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைக் கழக உதவி துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தடையின்றி குடிநீர் வழங்கும் திட்டம் ரூ. 169 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கொள்ளிடத்தில் 3 பிரதான குடிநீர் சேகரிப்பு கிணறுகளும், 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட குடிநீர் சேகரிப்பு கிணறு கட்டும் பணி, தாங்கு பாலம் அமைக்கும் பணி உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இப் பணிகளைப் பார்வையிட்ட அதிகாரிகள், பணிகளை உரிய காலக்கெடுவுக்குள் முடிக்க அறிவுறுத்தினர். முன்னதாக, மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொறியாளர்கள் மற்றும் வாட்டர் மற்றும் பவர் கன்சல்டன்சி பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் போது, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, நிர்வாகப் பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம், வாட்டர் மற்றும் பவர் கன்சல்டன்சி சேவை நிறுவனப் பிரதிநிதிகள் சுப்பாராவ், நாகேந்திரன், கோபிநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.