தினமலர் 19.04.2010
குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை : புதிய கலெக்டர் காமராஜ் பேட்டி
மதுரை : ”குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது”, எனமதுரை மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்ற சி.காமராஜ் கூறினார்.
மதுரை கலெக்டராக இருந்த மதிவாணன் நீண்ட நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றார். அவருக்கு பதில் புதிய கலெக்டர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப் பட்டது. இதைத் தொடர்ந்து சி.காமராஜ் கலெக்டராக அறிவிக்கப் பட்டார். நேற்று அவர் முகாம் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
கலெக்டர் பொறுப்பை கவனித்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உசிலம்பட்டி அருகே போத்தம் பட்டியில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமத்துவபுரம் பணிகள் விரைவுபடுத்தப்படும். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 93 கிராமங்களில், பணிகள் விரைவில் தேர்வு செய்யப் பட்டு செயல்படுத்தப்படும். விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. இலந்தைகுளம், வடபழஞ்சி பகுதிகளில் தொழில் நுட்ப பூங்காக்கள் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படும்.
மேலூர் அருகே அம்பலக்காரன் பட்டியில் அமைய உள்ள டிராக்டர் தொழிற்சாலை, இடையபட்டி தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வு மையம் போன்றவற்றுக்கு இடம் கையகப்படுத்தும் பணி முடிந்துள்ளது. விரைவில் பணி துவங்கும். மேலூரில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலையும் விரைவில் துவக்கப்படும்.
தற்போது கோடைகாலம் என்பதால் வைகை அணை நீரை பொறுத்தவரை, மதுரை நகருக்கு மே இறுதி வரை தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல ஊரக பகுதிகளை பொறுத்தவரை குடிநீர் தட்டுப்பாடுள்ள கிராமங்களில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுரை நகரின் முக்கிய திருவிழாவான மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றார்.