தினமலர் 01.06.2010
குடிநீர் வழங்கலில் பெற்ற தாயாக செயல்படணும்‘ நகராட்சி தலைவருக்கு கவுன்சிலர் அட்வைஸ்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்குள் குடிநீர் விநியோகம் செய்வதில் மாற்றான் தாயாக இல்லாமல் பெற்றத் தாயாக செயல்படுமாறு நகர்மன்ற தலைவருக்கு கவுன்சிலர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். புதுக்கோட்டை நகராட்சியின் மாதாந்திர இயல்பு கூட்டம் நகர்மன்றத் தலைவர் ராமதிலகம்(தி.மு.க) தலைமையில் நடந்தது. ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் கீழ்வருமாறு: இப்றாஹீம் பாபு(காங்கிரஸ்): புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட், சந்தைப்பேட்டை உள்ளிட்ட நகர்ப்பகுதிகளை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டுவரும் நகராட்சி ஆணையருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நகராட்சிப் பகுதிக்குள் குடிநீர் பிரச்சனை விஷ்வரூபம் எடுத்துவரும் நிலையில் பல இடங்களில் பைப்புகள் உடைந்து தண்ணீர் விணாகி கொண்டிருக்கிறது. இவற்றை சரிசெய்ய வேண்டும். ஆணையர்: குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் சரிசெய்யப்படும். முருகேசன்(தி.மு.க): குடிநீர் கிடைக்காமல் அண்ணாநகர், மாமுண்டிநகர் பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவற்றை சரிசெய்யவேண்டும். சந்திரசேகர்(தி.மு.க): திருவள்ளுவர்நகர், கலீப்நகர் நான்காம்வீதி உள்ளிட்ட பகுதிகளில் அம்மையாப்பட்டி குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கோடை காலம் என்பதால் இந்த தண்ணீர் உப்புநீராக மாறியுள்ளது. இதை பயன்படுத்த முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர். காவிரி குடிநீர் திட்டத்தின் மூலம் அப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்கவேண்டும்.
மாரிமுத்து(அ.தி.மு.க): திருவப்பூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. நகரில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க நகர்மன்றத் தலைவர் அக்கரை எடுக்கவில்லை. அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நைனார்முகம்மது(தி.மு.க): புதுக்கோட்டை நகராட்சிகுட்பட்ட காட்டுப்புதுக்குளம் படிப்படியாக நிரப்பட்டு 80 ஏக்கர் நிலம் மாயமாகிவிட்டது. பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. இத்திட்டத்துக்காக பயன்படுத்தப்பட்ட சிமின்ட் கலவை 38 சதவீதம் குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால் புதுக்கோட்டை நகராட்சியை ஆண்டவனால் கூட பாதுகாக்க முடியாது. கர்ணன்(சுயே): வடக்கு 3,4 ஆகிய வீதிகளில் குடிநீர் சுத்தமாக வருவதில்லை. ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தலைவரிடம் மனு கொடுத்தால் அந்த மனுவும் குப்பை தொட்டிக்கு சென்றுவிடுகிறது. சுயேட்சை கவுன்சிலர் என்பதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பழனியப்பன்(இந்திய கம்யூனிஸ்ட்): புதுக்கோட்டை நகராட்சியின் வரியினங்கள் மூலமாவ மொத்தவருவாய் எட்டு கோடி ரூபாயாக உள்ள நிலையில் ரூ.3.25 கோடி வரை பாக்கி உள்ளது. வணிக நிறுவனங்களுக்கான வரி 80 சதவீதம் உயர்த்தப்பட்டதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையில் நகர்மன்றத் தலைவர் மாற்றான் தாயாக இல்லாமல் பெற்றத் தாயாக செயல்பட வேண்டும்.* உசிலங்குளம், போஸ்நகர் பகுதிகளில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர் குமார் கறுப்பு துணியால் முக்காடு அணிந்தவாறு நகர்மன்ற கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்தவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.