தினமணி 30.07.2009
குடிநீர் விநியோகம்: பழுதடைந்த மோட்டார்கள் உடனே மாற்றப்படும் – மேயர்
மதுரை, ஜூலை 29: குடிநீர் விநியோகப் பயன்பாட்டில் உள்ள பழுதான மோட்டார்கள், அடிபம்புகள் உடனடியாக மாற்றப்படும் என, மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி தெரிவித்தார்.
மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட வார்டுகளில் சீரான குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டம், மேயர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையர் (பொறுப்பு) சக்திவேல் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள், தங்களது வார்டுகளில் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதை சரிசெய்யவும், குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்கவும், பழுதடைந்த குழாய்களை மாற்றவும், சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் எனவும் கோரினர்.
மேலும், ஆபரேட்டர்கள் சரியான அளவு குடிநீரைத் திறந்துவிடுவதில்லை எனவும், மூடி இல்லாத பாதாளச் சாக்கடைகளுக்கு உடனடியாக மூடிகள் அமைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து மேயர் பேசுகையில், பழுதான நிலையில் உள்ள போர்வெல் மோட்டார்கள் மற்றும் அடிபம்பு மோட்டார்களை உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சரியான அளவு குடிநீர் விநியோகிக்கவும், பாதாளச் சாக்கடைக்கான மூடிகளை உடனடியாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேயர் எச்சரித்தார்.
கூட்டத்தில் நிர்வாகப் பொறியாளர் மோகன்தாஸ், உதவி ஆணையர் (மேற்கு) ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.