தினமணி 13.09.2010
குடியாத்தம் நகராட்சியில் கை நழுவிப்போன புதைசாக்கடைத் திட்டம்
குடியாத்தம், செப். 12: குடியாத்தம் நகராட்சியில் செயல்படுத்தவிருந்த புதைசாக்கடைத் திட்டம் கைநழுவிப்போனது. இத்திட்டத்துக்காக அரசு ஒதுக்கீடு செய்த முதல்கட்ட நிதி | 1 கோடி திரும்பப் பெறப்பட்டது.
குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. 10 சதுர கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்நகராட்சியில் 1.20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகராட்சியில் புதைசாக்கடை அமைப்பதற்கு 2003-ல் திட்டம் தயாரிக்கப்பட்டது. திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள 2004-2005-ம் நிதியாண்டில் நகராட்சி நிதியிலிருந்து |21 லட்சம் மத்திய அரசுக்கு செலுத்தப்பட்டது. அதையடுத்து முதல்கட்ட ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன.
திட்டத்திற்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரை மறுபயன்பாட்டுக்குட்படுத்த கால்வாய்கள் அமைக்கவும் சுமார் 40 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இந்திரா நகர், அம்மணாங்குப்பம் கிராமங்களில் இதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட இந்திரா நகர் நிலம் கௌன்டன்ய நதி ஆற்றுப்படுகை என்பதாலும், அம்மணாங்குப்பம் கிராமம் நீர்வரத்துப் பகுதி என்பதாலும் அந்த இடங்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நிராகரித்தனர். இதனால் திட்டத்துக்கான ஆய்வுப் பணியில் தேக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் 2009-10-ம் நிதியாண்டில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் குடியாத்தம் நகரில் புதைசாக்கடைத் திட்டம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசு அறிவித்தது.
முதலில் |38 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. பின்னர் திருத்திய மதிப்பீடு |47 கோடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 9 மாதம் முன்பு முதல் தவணையாக |1 கோடி நிதி குடியாத்தம் நகராட்சிக்கு அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், புதைசாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த, நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு 90 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என திட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் நகராட்சி நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணீரை மட்டுமே விநியோகம் செய்து வந்தது. அத்துடன் 90 லட்சம் லிட்டர் நீரை தேக்கி வைக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள், நீராதாரம் இல்லாததால் இத்திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பு கைநழுவிப் போனது.
அதனால் இத்திட்டத்துக்காக முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட |1 கோடி நிதியை கடந்த மாதம் அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இதுகுறித்து தொடர்புடைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
ஒகேனக்கல் அல்லது மேட்டூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்திட்டம் நிறைவேறினால் குடியாத்தம் நகர மக்களுக்கு போதிய குடிநீர் நாள்தோறும் விநியோகிக்க முடியும். அப்போது புதைசாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.சில விதிமுறைகளின் கீழ் திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பு குடியாத்தம் நகராட்சிக்கு இல்லாமல் போயுள்ள நிலையில், நகரில் கடந்த சில நாள்களில் பெய்த மழையில் ஆங்காங்கே நீர் தேங்கி கழிவுநீருடன் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
புதைசாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நகரில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும், கொசுத் தொல்லைக்கு முடிவு ஏற்படும் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்த குடியாத்தம் நகராட்சி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.