தினகரன் 04.11.2010
குடியேற்றம் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை திரும்ப தர வேண்டும்
மும்பை, நவ. 4: ஆதர்ஷ் சொசைட்டி ஊழலை தொடர்ந்து, மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையத்துக்கு(எம்.எம்.ஆர்.டி.ஏ.) வழங்கப்பட்ட குடியேற்றம் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை திரும்ப பெற மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
எம்எம்ஆர்டிஏவுக்கு முதலில், ஒரு கட்டிடத்தின் கட்டுமான பணி தொடங்கு வதற்கு சான்றிதழ் வழங்கும் அதிகாரம் மட்டுமே இருந்தது. கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தில் குடும்பங்கள் குடியேற சான்றிதழ் வழங்கும் அதிகாரம் தரப்பட்டவில்லை.
இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு எம்எம்ஆர்டிஏ கமிஷனர் ரத்னாகர் கெய்க்வாட், அப்போதைய மாநகராட்சி கமிஷனர் ஜெய்ராஜ் பதகிற்கு, குடியேற்றம் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் எம்.எம்.ஆர்.டி.ஏவுக்கு தரப்பட வேண்டும் என கோரி ஒரு கடிதம் எழுதினார். இதையடுத்து அந்த அதிகாரத்தை எம்எம்ஆர்டிஏவுக்கு மாநகராட்சி வழங்கியது.
இத்தகைய சூழ்நிலையில் நேற்று முன்தினம் மாநகராட்சி பொதுக்குழு கூடியது. அப்போது ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் குறித்து விவாதிக்கப்பட்டது. அவைத்தலைவர் சுனில் பிரபு கூறுகையில், ‘’விதவைகள் மற்றும் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை, மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் அபகரித்துள்ளார். அந்த வீடுகளை அவர் தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளார்” என குற்றம்சாட்டினார்.
அவைத்தலைவரின் இந்த குற்றச்சாட்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. இறுதியில் அனைத்து கட்டிடங்களில் குடியேறியவர்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என முடிவு செய்த பொதுக்குழு, பிரச்னைக்கு காரணம், குடியேற்றம் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் எம்எம்ஆர்டிஏவுக்கு தரப்பட்டதுதான். எனவே அதை திரும்ப பெற வேண்டும் என யோசனை தெரிவித்தது.
இது குறித்து மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ராகுல் செஷாலே கூறுகையில், ‘’குடியேற்றம் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை, மாநகராட்சிக்கு எம்எம்ஆர்டிஏ திரும்ப தர வேண்டும். இதை பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.