தின மணி 20.02.2013
தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை குப்பை இல்லா பகுதியாக மாற்றும் விதமாக செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.
சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை தஞ்சாவூர் கோட்டாட்சியர் என். காளிதாஸ் தொடக்கி வைத்தார். இந்தப் பேரணி கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளுக்குச் சென்றது. இதில், மாரியம்மன் கோவில் மகளிர், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்தக் கோவிலுக்கு 10 அலங்கார குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன. பசுமைப் புரட்சிக்காக 10 மரக்கன்றுகள் நடப்பட்டன. கோவிலில் 200 பணியாளர்கள் தூய்மைப் பணி மேற்கொண்டனர். இதுகுறித்து மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆர். ராமமூர்த்தி தெரிவித்தது:
பெரியகோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் போன்ற சுற்றுலா தலங்களை குப்பை இல்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அலங்கார குப்பைத் தொட்டிகள் பெரியகோவிலுக்கு 5-ம், மாரியம்மன் கோவிலுக்கு 10-ம் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பா. ராம்மனோகர், நகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஞானசேகரன், ஊராட்சித் தலைவர் ஆர். தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.