தினகரன் 29.11.2010
குப்பை, கழிவுநீர் அகற்ற முடியவில்லை நகராட்சி வளாகத்தில் நகராத வாகனங்கள்பூந்தமல்லி, நவ.29: பூந்தமல்லி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 45,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சாலை மற்றும் தெருக்களில் தினமும் 6 டன் குப்பை சேருகிறது. நகராட்சியில் குப்பை சேகரிக்கும் 6 லாரிகளும் பழுதாகி உள்ளன. மாத கணக்கில் பழுதுபார்க்காமல் நகராட்சி வளாகத்தில் காட்சி பொருளாக லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஒர்க் ஷாப்பில் சர்வீசுக்கு விடப்பட்டுள்ள லாரிகளும் எடுக்கப்படவில்லை. கழிவுநீர் அகற்றுவதற்கு 2 லாரிகள் உள்ளன. அதில் ஒரு லாரி பழுதாகி விட்டது. கழிவுநீர் அகற்றுவதற்கு பணம் செலுத்தி, ஒரு மாதம் வரை மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் செப்டிக் டேங்க் நிரம்பி சாலையில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலத்தில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கொசு மருந்து தெளிப்பதற்காக ரூ3 லட்சத்தில் வாகனம் வாங்கப்பட்டது. ஆனால், 6 மாதமாக கொசு மருந்தே தெளிக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்போது கொசு தெளிப்பான் வாகனமும் பயனற்று கிடக்கிறது.
நகராட்சி பகுதியில் சேருகிற குப்பையை குளக்கரைத் தெரு, குமணன்சாவடி&மாங்காடு சாலை மற்றும் பூந்தமல்லி புறவழிச்சாலையையொட்டி கொட்டுகின்றனர். அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ஆவடி பைபாஸ் சாலையில் குளம்போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
மேலும் பூந்தமல்லி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சிறிய பூங்கா முழுவதும் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால், பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, பூந்தமல்லி நகராட்சி பகுதியில் தேங்கும் குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும். பழுதான லாரிகளை சரி செய்து சாலைகளில் தேங்கிய கழிவுநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.