தினமலர் 06.05.2010
குப்பை கிடங்காக மாறிவிட்ட மேலூர் காந்திஜி பூங்கா
மேலூர்: பராமரிப்பு இல்லாமல் மேலூர் காந்திஜி பூங்கா, பன்றிகள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாகி உள்ளது. பொழுதுபோக்கு இடம் இல்லை என்பதால் 30 ஆண்டுகளுக்கு முன் மேலூரில் காந்திஜி பூங்கா அமைக்கப்பட்டது. மூன்று ஏக்கர் பரப்பளவில் செயல் பட்ட இப்பூங்காவில் ஆரம்பத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கியது. சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் இருந்தன. சுற்றுச் சுவருடன் பாதுகாப்பாக செயல்பட்டது.பின் சிறிது சிறிதாக இதன் பராமரிப்பை நகராட்சி நிறுத்தி விட்டது. சுற்றுச் சுவரை சமூக விரோதிகள் சேதப்படுத்தி, எளிதாக உள்ளே போய் வருவதற்கு வசதியாக மாற்றிக்கொண்டனர். இது குறித்து ‘தினமலர்‘ இதழில் செய்தி வெளியானது. அப்போதைய நகராட்சி தலைவர் சாகுல் அமீது, ”உடனடியாக ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் பூங்கா சீரமைக்கப்படும், காலை வேளையில் நடப்பவர்களுக்கு வசதியாக நடை மேடை அமைக்கப்படும்” என நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினார்.
அதன் பிறகு அத்திட்டம் குப்பையில் போடப்பட்டது. அடுத்து வந்த நகராட்சி தலைவர் மற்றும் கமிஷனரிடம் இது குறித்து வலியுறுத்தப் பட்டது. இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது காந்திஜியின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களுக்கு மட்டும் இப்பகுதி காங்கிரசார் இப்பூங்காவிற்கு வருவது வழக்கம். அப்போது காந்தி சிலைக்கு ஒரு மாலையை போட்டதோடு தங்கள் கடமை முடிந்தது என கருதி இவர்கள் சென்று விடுகின்றனர்.
தற்போது காந்தி சிலைக்கு சிறுவர்கள் சைக்கிள் டயரை மாலையாக போட்டு விளையாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. குப்பை மேடாக மாறி விட்ட இப்பூங்காவிற்கு பன்றிகளும், இரவு நேர சமூக விரோதிகள் மட்டுமே வந்து செல்கின்றனர். சுற்றுச் சுவர் முற்றிலும் சேதமாகி விட்டது. உடனடியாக மேலூர் நகராட்சி இப்பூங்காவை செப்பனிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.