தினமணி 12.04.2010
குப்பைகளை அகற்ற புதிய லாரி
போடி, ஏப். 11: போடி நகராட்சியில் இரும்புத் தொட்டிகளுடன் கூடிய லாரியை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். லட்சுமணன் செயல்பாட்டுக்குத் தொடக்கி வைத்தார்.
போடி நகராட்சியில் சுகாதாரப் பணிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் குப்பைகளைத் தவிர்க்க ஒருமுறை பயன்படுத்தும் குப்பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் போடி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சேகரிக்கும் குப்பைகளை அகற்ற இரும்பு தொட்டிகளுடன் கூடிய லாரி வாங்கப்பட்டுள்ளது. ரூ.11 லட்சம் செலவில் 22 இரும்புத் தொட்டிகளும், அவற்றைக் கையாள ரூ.11 லட்சம் செலவில் லாரியும் வாங்கப்பட்டு, இரும்பு தொட்டிகள் நகரின் முக்கிய குப்பை சேகரிப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் செயல்பாட்டைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நகர்மன்றத் தலைவர் ரதியாபானு தலைமையில் நடைபெற்றது. போடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.லட்சுமணன் லாரியுடன் இரும்புத் தொட்டிகளை இணைக்கும் பட்டனை அழுத்தி தொடங்கி வைத்தார்.
நகர்மன்றத் துணைத் தலைவர் ம.சங்கர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகராட்சி கணக்காளர் முருகதாஸ், சுகாதார மேற்பார்வையாளர் கருப்பணன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.