குப்பைமேடாக மாறிய மாம்பாக்கம் தெருக்கள் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
சுங்குவார்சத்திரம்:சுங்குவார்சத்திரம் அடுத்துள்ள மாம்பாக்கம் கிராமத்தில், குப்பை வெளியேற்றம் அதிகரித்துள்ள நிலையில், அகற்ற முடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறி வருகின்றன.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மாம்பாக்கம் கிராமம். இக்கிராமத்திற்கு சொந்தமான பெரும் பகுதி சிப்காட் வளாகமாக மாறிவிட்டது. சிப்காட் வளாகத்தில், 70க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்கள் தங்க வசதிக்காக, புதிய குடியிருப்புக்கள் கட்டப்பட்டன.
தொழிலாளர்கள் அதிகமாக மாம்பாக்கம் கிராமத்தில் குடியேறி வருகின்றனர். வெளிமாநில இளைஞர்கள், வாடகைக்கு வீடு எடுத்து, 10 முதல் 15 பேர் ஒன்றாக தங்குகின்றனர். இவர்கள், குப்பை, கழிவு பொருட்களை சாலையில் வீசுகின்றனர்.இதனால், சாலைகள் குப்பைமேடாக காட்சியளிக்கின்றன. கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெளிமாநில இளைஞர்கள் சாலையோரங்களிலேயே குளிக்கின்றனர். சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. ஊராட்சியில், குப்பை அகற்ற போதிய ஊழியர்கள் இல்லை.
இதனால், கிராமத்தில் உள்ள சாலைகள் குப்பை மயமாக காட்சி அளிக்கின்றன. குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகமும், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.