தினமணி 15.10.2013
குப்பையிலிருந்து பிளாஸ்டிக் சாலை:மாங்காடு பேரூராட்சியில் அறிமுகம்
தினமணி 15.10.2013
குப்பையிலிருந்து பிளாஸ்டிக் சாலை:மாங்காடு பேரூராட்சியில் அறிமுகம்
காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே முதல்முறையாக மாங்காடு
பேரூராட்சியில் குப்பைகளை தரம்பிரித்து பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணி
தொடங்கப்படவுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.
இங்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கிழ் தனியார் மூலம் 34 ஊழியர்களும், பேரூராட்சி மூலம் 21
துப்புரவு ஊழியர்களும் நியமிக்கப்பட்டு, அனைத்து வார்டுகளிலும் குப்பைகள்
சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் நாளொன்றுக்கு 12 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
புதிய அரவை இயந்திரம்…
இந்த குப்பைகள், பேரூராட்சிக்குள்பட்ட ராமகிருஷ்ணா நகரில்
அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு
பிளாஸ்டிக் பொருள்கள் மட்டும் தனியே பிரிக்கப்படுகின்றன.
பின்னர் பெறப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள், கப்கள் உள்ளிட்டவை
தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டு, அவை பேரூராட்சியில் புதிதாக
வாங்கப்பட்டுள்ள அரவை இயந்திரத்தின் மூலம் அரைக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் சாலை…
இதனைத்தொடர்ந்து அவை, சிறிய பிளாஸ்டிக் துகள்களாக சேகரிக்கப்பட்டு, பிளாஸ்டிக் தார்ச் சாலைகளாக மாற்றப்படும்.
இது போன்ற சாலைகள், சாதாரண தார்ச் சாலைகளைக் காட்டிலும் அதிக வலுவுள்ளதாகவும், நீண்டக்காலம் சேதமடையாமலும் இருக்கும்.
இது குறித்து மாங்காடு பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் கூறியது:
மாங்காடு பேரூராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.1.25 லட்சம் மதிப்பில் புதிய அரவை இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம் மூலம் ஒரு மணிநேரத்தில் 40 முதல் 50 கிலோ வரையிலான
பிளாஸ்டிக் பொருள்கள் அரைக்கப்பட்டு, அவற்றைக் கொண்டு பிளாஸ்டிக் சாலைகள்
அமைக்கப்படும்.
தற்போது பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
விரைவில் இங்குள்ள சாலைகள் பிளாஸ்டிக் சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.
பேரூராட்சியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு சாலை
அமைக்கப்படுவது காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே மாங்காடு பேரூராட்சியில்தான்
முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றார் அவர்.