தினகரன் 23.07.2010
குறிஞ்சிப்பாடி பகுதியில் சுவரில் தலைவர்கள் படம்
நெய்வேலி, ஜூலை 23: தமிழக தலைநகரான சென்னையில் அரசு மற்றும் தனியார் சுவர்களில் சினிமா மற்றும் தனியார் நிறுவன விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகிறது. இது பொதுமக்களின் முகத்தை சுளிக்கும் வகையில் அமைந்தது. இதை மாற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
உடனடியாக சென்னை மேயர் சுப்பிரமணியம், சென்னை நகரின் பிரதான சாலைகளின் அருகே அமைந்துள்ள மதில் சுவர்களில் கண்களை கவரும் இயற்கை காட்சிகள், சமூக சிந்தனையை வளர்க்கும் படங்கள், தேசிய தலைவர்களின் படங்களை வரைய உத்தரவிடப்பட்டது. இது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. இதே போல பிற நகரங்களின் மதில் சுவரில் அழகிய இயற்கை காட்சிகளை வரையலாம் என்ற எண்ணம் பொதுமக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் ஏற்பட்டது.
தற்போது குறிஞ்சிப்பாடியில் உள்ள நெடுஞ் சாலைத்துறை உதவி பொறியாளர் அலுவலக மதில் சுவர் அழகிய வண்ணம் தீட்டப்பட்டு, அய்யன், திருவள்ளுவர், விவேகானந்தர், காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களது உருவ படங்கள் வரையப்பட்டு வருகிறது. இதே போல மாவட்டத்தின் பிற நகர பகுதிகளிலும் கண்ணை கவரும் அழகிய படங்கள் அரசு சுவரில் வரையப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.