தின மணி 21.02.2013
பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, குளித்தலை நகராட்சி பெரியார் நகர் அருகே கொட்டப்பட்டு வந்த குப்பைகளை அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.
குளித்தலை நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், நகராட்சி எல்லைக்குட்பட்ட பெரியார் நகர் பகுதி அருகில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே பல ஆண்டுகளாகக் கொட்டப்பட்டு வந்தன.
நாளடைவில் இந்த இடம் குப்பைகளால் நிரப்பப்பட்டு மலைபோல காட்சியளித்தது. அதிக அளவில் கொட்டப்பட்ட குப்பைகள் அடிக்கடி தீப்பிடித்து, அப்பகுதியே புகை மண்டலமாக மாறிவந்ததால், இந்தப் பகுதியில் குடியிருப்போர், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும், நீர்த்தேக்கத் தொட்டியின் அருகே குப்பைகளைக் கொட்டுவதால், குடிநீர் மாசுபடும் சூழ்நிலை ஏற்பட்டது. இதன்காரனமாக, இந்தக் குப்பைகளை அகற்றக் கோரி நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் குப்பைகளை இந்த இடத்திலிருந்து அகற்றும் பணியை புதன்கிழமை தொடங்கியது. மண் கலந்த இந்தக் குப்பைகள் அனைத்தையும் அகற்றவும், மண் மற்றும் குப்பைகளை தனித்தனியே பிரித்தெடுத்து குப்பைகளை நகராட்சி வசம் ஒப்படைக்கவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தற்போது இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பிரித்து வழங்கப்படும் குப்பைகள் அனைத்தும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் உரமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நகராட்சி ஆணையர் எம். கலைமணி கூறினார்.