தினமலர் 23.07.2010
கூவம் நதிக்கு ஐந்து ஆண்டுகளில் விமோசனம்
சென்னை : “”கூவம் நதி அடுத்த ஐந்தாண்டுக்குள் சுத்தம் செய்யப்படும்,” என, தமிழக பொதுப்பணித் துறை செயலர் ராமசுந்தரம் பேசினார்.அண்ணா பல்கலையின் தொலை உணர்வு மையம் சார்பில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அரசுத் துறை அதிகாரிகளுக்கான பயிலரங்கம் நேற்று நடந்தது.
சென்னை நகரில் மேடு, பள்ளமுள்ள பகுதிகள், வெள்ள அபாய பகுதிகளை துல்லியமாக காட்டும், வானிலிருந்து லேசர் ஒளிக்கதிர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்பயிலரங்கில் முக்கிய பங்கு வகித்தன.பயிரலங்கை துவக்கி வைத்து ராமசுந்தரம் பேசியதாவது:நகரமயமாதல், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, முறையான கழிவுநீர் வசதியில்லாதது உள்ளிட்ட காரணங்களால், பருவமழைக் காலங்களில் வெள்ளம் ஏற்படுகிறது. இதனால் சென்னை நகரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் 1,400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு ஆண்டுகளில், சென்னையில் கழிவுநீர் வசதிகளை மேம்படுத்துவது, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர் வழி தடங்களை புதுப்பிப்பது மற்றும் புதிய கால்வாய்களை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.அடுத்த ஐந்தாண்டிற்குள், கூவம் நதி முற்றிலும் சுத்தம் செய்யப்படும். காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ராமசுந்தரம் பேசினார்.தமிழகத்தின் நில அமைப்புகள் மற்றும் அவற்றின் தன்மைகளை விளக்கும் நூலை, ஐதராபாத் தேசிய தொலை உணர்வு மைய துணை இயக்குனர் பேகரா வெளியிட, ராமசுந்தரம் பெற்றுக் கொண்டார்.பயிலரங்கில், அண்ணா பல்கலை தொலை உணர்வு மைய இயக்குனர் ராமலிங்கம், பதிவாளர் சண்முகவேல்,பொதுப்பணித் துறை, சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.