
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மங்களா எண்ணெய் வயலை சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இங்கு உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் முழுவதையும் அரசுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்கள் வாங்கி சுத்திகரிக்க முடியாத நிலையில் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸôர் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அளிக்க அனுமதிக்கப்படும் என்று அப்போது அவர் கூறினார்.
இங்கிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் குஜராத் மாநிலத்தில் உள்ள எம்ஆர்பிஎல் ஆலைக்கு டிரக் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
எந்தெந்த நிறுவனங்களுக்கு எண்ணெயை வழங்கலாம் என்பதை அரசே தீர்மானித்து பட்டியலை அளிக்கலாம் என கெய்ர்ன் இந்தியா நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி ராகுர் திர் கூறினார். மங்களா எண்ணெய் வயலில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 1.75 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் எடுக்கப்படும். கச்சா எண்ணெயை சுத்திகரிக்க போதுமான நிறுவனங்கள் இல்லாதுபோனாலும் உற்பத்தியைக் குறைக்கப் போவதில்லை என்று ராகுர் திர் மேலும் கூறினார்.
ராஜஸ்தான் எண்ணெய் வயலிலிருந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு 2 லட்சம் டன்னும் எச்பிசிஎல் நிறுவனத்துக்கு 3 லட்சம் டன்னும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தியாகும் எண்ணெய் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் 20 சதவீதம் நிறைவு செய்யலாம்.
விழாவில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா, இணையமைச்சர் ஜிதின் பிரசாத் மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.
2004-ம் ஆண்டில் இங்கு எண்ணெய் அகழ்வுப் பணி தொடங்கப்பட்டு தற்போது எண்ணெய் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கண்டறியப்பட்ட மிகப் பெரிய எண்ணெய் வயல் இதுவேயாகும்.
கெய்ர்ன் இந்தியா மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இங்கு எண்ணெய் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. கெய்ர்ன் இந்தியா நிறுவனம் 70 சதவீதப் பங்குகளையும் ஓஎன்ஜிசி 30 சதவீத பங்குகளையும் கொண்டிருக்கும். இந்த எண்ணெய் அகழ்வுப் பணிக்கு இதுவரை ரூ. 9,000 கோடி (200 கோடி டாலர்) முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே அளவிலான முதலீட்டை அடுத்த இரு ஆண்டுகளில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரம் பீப்பாய்கள் உற்பத்தி செய்யப்படும். பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2 லட்சம் பீப்பாய் வரை உயர்த்த்படும்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட எண்ணெய் வயல்களில் இது 25-வதாகும். மொத்தம் 3,111 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இது அமைந்துள்ளது.
தற்போது இங்கு 16 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். உலகிலேயே மிகவும் நீளமான குழாய்ப்பாதை 670 கி.மீ. அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலை செயல்பாட்டின் மூலம் மாநில அரசுக்கு ரூ. 36 ஆயிரம் கோடி ராயல்டி கிடைக்கும். மத்திய அரசுக்கு ரூ. 46 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யை பீப்பாய் 50 டாலருக்கு விற்றால் இந்தத் தொகை கிடைக்கும்.