தினமலர் 13.10.2010
கொசு ஒழிப்புக்கு நகராட்சி அழைப்பு
நாமக்கல்
: “நாமக்கல் நகராட்சியில் உள்ள தண்ணீர் தொட்டி, கிணறுகளில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் அபேட் மருந்து தெளிக்கப்பட உள்ளது‘ என, நகராட்சி சேர்மன் செல்வராஜ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் நகராட்சி பொது சுகாதார பிரிவில், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசுப்புழு ஒழிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஏ.டி.எஸ்., என்ற வகை கொசு புழுக்களை கட்டுப்படுத்தும் அபேட் மருந்து அனைத்து தண்ணீர் தொட்டிகளிலும் தெளிக்கப்பட உள்ளது. எனவே நகர மக்கள், பணியாளர்கள் கொண்டு வரும் கொசுப்புழு ஒழிப்பு மருந்தை பெற்று வீட்டில் தண்ணீர் தொட்டிகளில் ஊற்றிக் கொள்ள வேண்டும். வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் குழாய்களுக்கு வலை கட்ட வேண்டும். செப்டிக் டாங்க் தொட்டியில் உடைப்பு இருந்தால், அதை சரி செய்து கொசு உற்பத்தியாகும் அனைத்து வழிகளையும் அடைத்து, நகராட்சி கொசு உற்பத்தி இல்லாத நகரமாக விளங்க உதவ வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது