தினமலர் 17.02.2010
கொசுக்களை ஒழிக்க கைப்புகை இயந்திரம் பணியாளரிடம் ஒப்படைப்பு
கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில், கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள, 20 கைப்புகை இயந்திரங்கள் புதியதாக வாங்கப்பட் டுள்ளது. கோவை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள இது வரை லாரிகளும், சிறிய ரக ஆட்டோக்களும், மினிடோர் வேன்களும் பயன்படுத்தப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் ஏராளமான குடியிருப்புகள் கோவையில் உள்ளது. அப்பகுதிகளில் கொசு மருந்து இது வரை அடிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண கோவை மாநகராட்சியிலுள்ள நான்கு மண்டலத்திற்கு தலா ஒரு மண்டலத்திற்கு ஐந்து கைப்புகை இயந்திரங்கள் என 20 இயந்திரங்களை வாங்கியுள்ளது.”போர்ட்டபிள் தெர்மல் பாகிங்‘ என்ற பெயருள்ள கொசு மருந்து அடிக்கும் கைப்பம்பு இயந்திரத்தில் 45 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்கலாம். இயந்திரம் பெட்ரோலில் இயங்ககூடியது.
அதிக இரைச்சல் இல்லாமல் இயங்கும்; பைரித் ரம் மற்றும் டெக்னிக்கல்மாலத்தியான் இணைந்த கொசு மருந்துப்பொருள்; டீசல் ஆகியவற்றை இயந்திரத்தில் ஊற்றி இயக்க வேண்டும். புகையாக மருந்து வெளியேறும். கரும்புகை மற்றும் மருந்துப்புகை இரண்டும் கலந்து கொசுக்களை அழிக்கும். இந்த கொசு மருந்து அடிப்பதால்,டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல் ஏற்படுவதிலிருந்து தடுக்கலாம். முதற்கட்டமாக 20 இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு இயந்திரம் 49 ஆயிரம் வீதம் 20 இயந்திரங்களுக்கு 9.8 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது. “வார்டுக்கு ஒரு இயந்திரம் வீதம் 52 இயந்திரங்கள் வாங்கப்படும்‘ என, மேயர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.