தினமலர் 05.01.2010
கொசுவை ஒழிக்க ராணுவ ஆராய்ச்சி மையம் புதிய யுக்தி கண்டுபிடிப்பு

பெங்களூரு : பெருகி வரும் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் புதிய யுக்தியை கண்டுபிடித்துள்ளது.
கொசுவால் மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருகின்றன. கொசுவை ஒழிக்க ஏராமான முறைகள் கையாளப்படுகின்றன. இருப்பினும், முற்றிலும் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை.குவாலியர் நகரில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், பெண் கொசுவை வசீகரிக்கும் “பெரோமோன்‘ என்ற ஹார்மோனின் ரசாயன பொருளை கண்டுபிடித்துள்ளது. நீர்நிலைகளில் லார்வா வெளியிடும் பெராமோன் ஹார்மோன் வாசனையால் கவரப்படும் பெண் கொசுக்கள் அங்கு ஏராளமான முட்டைகளை இடுகின்றன.
இதைத் தெரிந்து கொண்ட ராணுவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், பெரோமோன் ஹார்மோன் ரசாயன மூலக்கூறு அடங்கிய திரவத்தை தயாரித்துள்ளனர். இதை ஒரு நீர்நிலையில் தெளிக்கும் போது அந்த இடத்தில் பெண் கொசுக்கள் படையெடுக்கும், ஆயிரக்கணக்கில் முட்டைகளை இடும். அந்த சமயம் பார்த்து பூச்சி கொல்லி மருந்துகளை தெளித்தால், ஒரே இடத்தில் கொசுக்களை அழித்து விடமுடியும், என கண்டறிந்துள்ளனர்.இந்தத் தொழில் நுட்பம் நான்கு தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு மருந்து தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் சோதனை ரீதியாக இந்த பூச்சி மருந்து பயன்படுத்தப்பட்டு, திருப்தி அளித்துள்ளதால், மற்ற மாநிலங்களிலும் இந்த மருந்தை பயன்படுத்தும் படி மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.இந்த மருந்தின் தொழில் நுட்பத்தை, அமெரிக்காவும் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது.