தினகரன் 24.01.2011
கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது ஊட்டி நகராட்சி அதிகாரிகள் தகவல்
ஊட்டி, ஜன. 24:
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பார்சன்ஸ்வேலி உட்பட அனைத்து அணைகளிலும் போதுமான நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர் ஹில், கோரிசோலா, அப்பர் மற்றும் லோயர் தொட்டபெட்டா, அப்பர் மற்றும் லோயர் கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி, கிளன்ராக் ஆகிய அணைகளில் இருந்து வழங்கப்படுகிறது.
பார்சன்ஸ்வேலி அணையிலிருந்து ஊட்டி நகர் மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு அதிகளவு நீர் விநியோகிக்கப்படுகிறது.
மக்கள் தொகை பெருக்கம் மற்றும் அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டத்திற்கு தகுந்தவாறு குடிநீர் வழங்க வேண்டிய நிலை ஊட்டி நகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக பெரும்பாலான ஆணைகள் நிரம்பின. எனவே கோடையில் இம்முறை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குடிநீர் வழங்க பிரதானமாக உள்ள அனைத்து அணைகளிலும் தேவையான அளவு நீர் இருப்பில் இருப்பதாக கூறியுள்ளனர். பெரும்பாலான அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காணப்படுகிறது.
கோடை சீசன் காலத்தில் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கும் தேவையான அளவு குடிநீரை வழங்க இயலும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.