கோடையைச் சமாளிக்க லாரிகளில் குடிநீர் விநியோகம் அதிகரிப்பு
கோடைகால குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதற்காக 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 21 டேங்கர் லாரிகளை கூடுதலாக குடிநீர் விநியோகப் பணிகளுக்கு அமர்த்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடிநீர் வாரியத்தின் மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்துக்காக 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 231 லாரிகளும், 6 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 104 லாரிகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
கோடை காலத்தில் குடிநீர்த் தேவை அதிகரித்துள்ளதால் லாரி குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் சனிக்கிழமைமுதல் (மே 11), 20 ஆயிரம், 9 ஆயிரம் மற்றும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 21 டேங்கர் லாரிகள் கூடுதலாக குடிநீர் விநியோகப் பணிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் 1.5 மில்லியன் லிட்டர் குடிநீரை நகரில் கூடுதலாக விநியோகிக்க முடியும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.