தினமணி 21.08.2010
கோட்டூர்புரத்தில் பூங்கா அமைக்கும் பணி: மேயர் தொடங்கிவைத்தார்
சென்னை, ஆக.21: கோட்டூர்புரத்தில் அடையாறு ஆற்றங்கரை ஓரம் 3.84 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 85.87 இலட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணியை மேயர் திரு.மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அடையாறு ஆற்றங்கரை ஓரம் 3.84 ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக இருந்தது. இது குடிசைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது. மேலும், அடையாற்றில் நீர் பெருக்கு அதிக அளவில் வரும் போது அங்கிருந்த குடிசைவாழ் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தமிழக முதல்வரின் உத்தரவின்படியும், துணை முதல்வரின் ஆலோசனைப்படியும் இங்கிருந்த குடிசைவாசிகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு, அவர்கள் மனகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.
பொதுப்பணித்துறையிடம் இருந்த இந்த இடம், மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஏற்கனவே பொதுப்பணித்துறை மூலம் நிழல் தன்னார்வ தொண்டு நிறுவனம் 240 வகையான மருத்துவ குணம் கொண்ட செடிகளை நட்டு பராமரித்து வருகிறது. இந்த அரிய வகை மரங்களுடன் புதிய பூங்கா, ரூ. 85.87 செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பூங்காவில் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்படும். அழகிய புல்தரைகள், பார்வையாளர்கள் அமர நடுவில் மண்டபம், பொதுசுகாதார வளாகம், பூங்காவிற்கு நவீன நுழைவுவாயில், 50 அமரும் இருக்கைகள் அமைக்கப்படும்.
10 மாதத்தில் பூங்கா அமைக்கும் பணி முடிக்கப்படும். பொதுமக்களோடு சேர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தினந்தோறும் வந்து செல்லும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்படும் என்றார் அவர்.