தினமணி 11.11.2009
கோவை, மதுரை, திருச்சியிலும் பெருநகர வளர்ச்சி குழுமங்கள்
சென்னை, நவ. 10: “சென்னையைப் போலவே தமிழகத்தில் இரண்டாம் நிலை நகரங்களான கோவை, மதுரை, திருச்சி, சேலத்தில் பெருநகர வளர்ச்சிக் குழுமங்களை உருவாக்கும் திட்டம் உள்ளது‘ என்று தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற “சர்வதேச நகர் ஊரமைப்பு தினம்-2009′ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவரும், செய்தித்துறை அமைச்சருமான பரிதி இளம்வழுதி பேசியது:
நகரமைப்பு செயல்பாடுகள் முதன்முதலாக, தமிழகத்தில் சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றது 1920-ம் ஆண்டாகும். அன்றுமுதல் நகரமைப்பு சம்பந்தமாக கருத்துருக்கள், திட்டங்கள், செயல்பாடுகள் நெடுந்தூரம் பயணித்துள்ளன.
தமிழகத்தில் இரண்டாம் நிலை நகரங்களான கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகியவற்றிலும் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது.
சென்னையைப் போலவே அந்நகர்களுக்கும் பெருநகர் வளர்ச்சிக் குழுமங்களை உருவாக்கவும் திட்டம் உள்ளது. உள்கட்டமைப்பு கட்டணத் தொகையை பயன்படுத்தி, நகரங்களின் உள்கட்டமைப்பைப் பெருமளவில் உயர்த்த அரசுத் திட்டமிட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் திட்ட அனுமதி சம்பந்தமாக அளிக்கப்பட்ட மனுவின் அன்றைய நிலையையும், தங்கள் நிலம் முழுமை, விரிவு வளர்ச்சித் திட்டங்களிலும் எந்த பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும், நிலச் சொந்தக்காரர்கள், பொதுமக்கள் கணினி மூலம் எளிதாகத் தெரிந்து கொள்ள ஏதுவாக ஏற்பட்டு செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஏற்பாடு சில மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளது. இத்தகைய மின் ஆளுமை தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளூர் திட்டக் குழுமங்களிலும், புதிய நகர வளர்ச்சிக் குழுமங்களிலும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன.
நகர் ஊரமைப்பு சட்டத்தின்படி மாநில அரசுக்கும், திட்டக் குழுமங்களுக்கும் உள்ள அதிகாரங்கள் உள்ளாட்சி மன்றங்களுக்கும், உள்ளூர் திட்டக் குழுமங்களுக்கும் பரவலாக்கப்பட்டுள்ளன.இத்தகைய அதிகாரப் பரவல் நீடித்த, நிலையான நகர வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த அடிப்படையில் சென்னை பெருநகர பகுதியில் உள்ள உள்ளாட்சி மன்றங்கள், சாதாரண கட்டங்களுக்கு திட்ட அனுமதி வழங்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அதிகாரம் அளித்துள்ளது.
திட்ட அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதங்களை தவிர்க்கும் வகையில் மனுக்களை உள்ளாட்சி மன்றங்கள் மூலமாக அல்லாமல் நேரடியாக அனுப்பவும் ஆணையிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளூர் திட்டக் குழுமங்கள், புதிய நகர வளர்ச்சி குழுமங்களுக்குரிய அதிகார வரம்புகள் உயர்த்தப்பட்டுள்ளன.அத்துடன் திட்ட அனுமதி, ஒப்புதல் வழங்குவதற்கான காலக் கெடுவையும் அரசு நிர்ணயித்துள்ளது. உள்ளூர் திட்டக் குழுமங்கள் 30 நாட்களுக்குள்ளும், நகர் ஊரமைப்பு ஆணையர் 45 நாள்களுக்குள்ளும் மனுக்களின் மீது முடிவெடுக்க வேண்டுமென அரசு ஆணையிட்டுள்ளது’ என்றார்.