கோவையில் அனுமதியின்றி செயல்பட்ட இறைச்சி, மீன் கடைகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கோவையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த இறைச்சி மற்றும் மீன்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.
அதிகாரிகள் திடீர் ஆய்வு
கோவை மாநகராட்சி பகுதியில் ஏராளமான ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே ரோட்டின் ஓரத்தில் அனுமதியில்லாமல் ஏராளான இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகள் செயல்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் லதாவுக்கு புகார் சென்றது.
அதன்படி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையாளர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குனர் டாக்டர் அசோகன் தலைமையில் அதிகாரிகள் கோவை பகுதியில் நேற்று காலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடைகள் அகற்றம்
இதில் கோவை கவுண்டம்பாளையத்தில் ரோட்டின் ஓரத்தில் இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகள் செயல்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மாநகராட்சியில் எவ்வித அனுமதியும் பெறாமல் கடைகளை நடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அனுமதியின்றி செயல்பட்ட அந்த கடைகளை அதிகாரிகள் அகற்றியதுடன், அந்த கடைகளில் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைத்து இருந்த 50 கிலோ இறைச்சிகள் மற்றும் 20 கிலோ மீன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–
7 கடைகள்
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரோட்டின் ஓரத்தில் இறைச்சி கடைகள் நடத்தப்படுவதால், ரோட்டில் செல்லும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை, இறைச்சிகளில் படிகிறது. அவற்றை பொதுமக்கள் வாங்கி சாப்பிடும்போது பல்வேறு கொடிய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அனுமதியின்றி ரோட்டின் ஓரத்தில் செயல்பட்டு வரும் கடைகளை அகற்ற ஆணையாளர் உத்தரவிட்டார்.
அதன்படி 4 மீன் கடைகள் மற்றும் 3 இறைச்சி கடைகள் அகற்றப்பட்டு, அந்த கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும். எனவே ரோட்டின் ஓரத்தில் அனுமதியின்றி இறைச்சி மற்றும் மீன்கடைகளை வைக்கக்கூடாது.
கடும் நடவடிக்கை
மேலும் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் இறைச்சி கடைகள் மீது பல்வேறு புகார் வந்த வண்ணம் உள்ளது. கோழி இறைச்சியை விற்பனை செய்யும் கடைகளில் கோழி இறைச்சியை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அங்கு ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது.
அதுபோன்று ஆடு இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் மாடு மற்றும் கோழி இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் ஸ்ரீராம், மேற்பார்வையாளர் சரவணன், முருகன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.