தினமலர் 03.06.2010
சாக்கடையில் வளர்க்கப்பட்ட கீரை பறிமுதல்
திருப்பூர் : சாக்கடை கால்வாயில் விளைந்த கீரைகளை பறித்து, விற்பனைக்கு தயார் செய்த போது, மாநகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் வெள்ளியங்காடு அருகே உள்ள முத்தையன் கோவில் ஓடையில் வற்றாத கழிவு நீர் பாய்கிறது. இந்த ஓடையின் ஓரத்தில் செடிகள் அதிகம் முளைத்து, பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. ஒவ்வொரு பருவமழை காலத்திலும், அதிகப்படியான செடிகள் முளைத்து புதர்மண்டி காணப்படும். ஓடையின் பல பகுதிகளில், பொன்னாங்கண்ணி கீரை அதிகம் விளைந்துள்ளது. இந்நிலையில், முத்தையன் கோவில் எதிரே உள்ள ஓடையில் இறங்கி, சிலர் கீரையை பறித்தனர். அவற்றை கட்டுகளாக பிரித்து கட்டி, விற்பனைக்காக மார்க்கெட் கொண்டு செல்ல ஆயத்தமாகினர். அதைப்பார்த்த பொதுமக்கள், சாக்கடையில் விளைந்த கீரைகளை விற்பனைக்கு தயார் செய்தவர்களை மடக்கி, வாக்குவாதம் செய்தனர். கீரையை பறித்தவர்கள், அவற்றை போட்டுவிட்டு ஓடிவிட்டனர். பொதுமக்கள் கொடுத்த தகவலை தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வந்து கீரைகளை கைப்பற்றி குப்பையில் கொட்டினர். “மார்க்கெட்டில் விற்கப்படும் கீரை, வேருடன் இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில், விவசாயிகள்தான் விற்கிறார்களா என்பதை உறுதிசெய்து வாங்கி, பயன்படுத்த வேண்டும்‘ என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.