சாலைகளில் திரியும் மாடுகள் கோசாலைகளில் ஒப்படைக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் என, மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மு. சீனி அஜ்மல்கான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை தொழுவத்தில் கட்டி வளர்க்க வேண்டும். அவ்வாறில்லாமல் தெருக்கள், சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக அலைய விடுவது தண்டனைக்குரிய குற்றம்.
தெருக்களில், சாலைகளில் அலைந்து திரியும் மாடுகளை மாநகராட்சிப் பணியாளர்கள் பிடித்து கோசாலைகளில் ஒப்படைக்கப்பார்கள். அவ்வாறு கோசாலைகளில் ஒப்படைக்கப்பட்ட மாடுகளைத் திரும்பப் பெற இயலாது.
மேலும், அந்த மாடுகளின் உரிமையாளர்கள் மீது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய வகைக்கு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.