சாலையோர இறைச்சிக் கடைகளால் சுகாதாரக் கேடு
தேனி அல்லிநகரம் நகராட்சி, பழனிசெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலையோரங்களிலும், சாக்கடை மீது மேடை அமைத்தும் செயல்பட்டு வரும் இறைச்சிக் கடைகளை தடை செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நகராட்சிக்கு எல்லைக்கு உள்பட்ட பெரியகுளம், மதுரை, கம்பம் நெடுஞ்சாலை ஓரங்களிலும், நகராட்சியை எல்லையை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் கம்பம் நெடுஞ்சாலையோரத்திலும், சாக்கடைகளுக்கு மேல் மூடி அமைத்தும் 300-க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
ஆக்கிரமிப்பு இடத்தில் திறந்த வெளியில் செயல்பட்டு வரும் கடைகளின் முன்பு, சுகாதாரமற்ற முறையில் ஆடு, கோழி மற்றும் மீன்களை அறுத்து விற்கின்றனர். காலையில் இறைச்சி விற்பனை நடைபெறும் கடைகள், இரவில் சிற்றுண்டி கடைகளாகவும், கோழி மற்றும் மீன் வறுவல் கடைகளாகவும் மாறி விடுகின்றன.
இந்த இறைச்சிக் கடைகளில் இருந்து கழிவுகள் சாலையிலும், சாக்கடையிலும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் இறைச்சிக் கழிவுகளை உண்பதற்காக ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன.
நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில், சுகாதார அலுவலரின் சான்று பெற்று, நகராட்சி ஆடு அறுக்கும் தொட்டியில் வைத்து ஆடுகளை அறுத்து விற்பனை செய்ய வேண்டும் என்பது விதிமுறை.
இதற்கென நகராட்சி நிர்வாகம் சார்பில் இறைச்சிக் கடைக்காரர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், இந்த விதிமுறையை பின்பற்றாமல், நகராட்சி குத்தகைதாரர்கள் இறைச்சிக் கடைகளுக்கு நேரடியாகச் சென்று கட்டணம் மட்டும் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கும் சாலையோர இறைச்சிக் கடைகளை தடை செய்ய நகராட்சி நிர்வாகம், காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
நகராட்சி வாரச் சந்தை வளாகத்தில், இறைச்சிக் கடைகளுக்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்தும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
சாலையோர இறைச்சி விற்பனைக் கடைகளை தடை செய்து, வாரச் சந்தை வளாகத்தில் உள்ள இடத்தை இறைச்சிக் கடை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கவும் நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பு.