தினமலர் 14.10.2010
சாலையோர கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
சென்னை
: சாலையோர வியாபாரிகளுக்கு, நீதிபதி முன்னிலையில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும் என்று மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.சென்னை மேயர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:தி.நகர் பகுதியில், தியாகராயா சாலை, உஸ்மான் சாலை, சிவபிரகாசம் சாலை ஆகிய சாலைகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு, பாண்டி பஜாரில் அடுக்கு மாடி வணிக வளாகம் கட்டப்பட்டது.அயனாவரம் பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு பால வாயல் மார்க்கெட் தெருவில் வணிக வளாகம் கட்டப்பட்டது.அதுபோல் ராயபுரம் மணியக்கார சத்திர தெருவிலும் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகங்களை கடந்த மாதம் 13ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மணியக்கார சத்திரத் தெரு வளாகத்தில் 117 நபர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார்கள் வந்தது.இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, 101 உண்மையான பயனாளிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போல், பாண்டி பஜார், அயனாவரம், வணிக வளாகங்களில் உண்மையான பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, “ஹாக்கிங்‘ கமிட்டி நீதிபதி ராமமூர்த்தி முன்னிலையில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.