தினமணி 10.02.2010
சாலையோரங்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை ஆட்சியர் எச்சரிக்கை
காஞ்சிபுரம், பிப். 9: சாலையோரங்களில் குப்பைகளை கொட்டினால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும், குப்பை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா தெரிவித்தார். ÷இது குறித்து நிருபர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
÷காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 24 பேரூராட்சிகளில் சிட்லபாக்கம், குன்றத்தூர், நந்தம்பாக்கம், பெருங்களத்தூர், சோழங்கநல்லூர், மாங்காடு, செம்பாக்கம், திருநீர்மலை, மாடம்பாக்கம், பெருங்குடி, பீர்க்கன்கரனை, பள்ளிக்கரணை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய பேரூராட்சிகள் சென்னையை சுற்றியுள்ளன.
இவைகள் தவிர சென்னை சுற்றி முக்கிய சாலைகளில் பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், 30 ஊராட்சிகளும் அமைந்துள்ளன.
÷சென்னையை சுற்றியுள்ள 13 பேரூராட்சிகளில் மட்டும் 98 டன் குப்பை சேர்கிறது. இதில் மக்கும் குப்பை 20 டன் எருவாக்கப்படுகிறது. மக்காத குப்பை 78 டன் குப்பைகள் அந்த பேரூராட்சியின் குப்பை சேகரிக்கும் தளத்தில் கொட்டப்படுகிறது.
அதுபோக மீதமுள்ள 50 டன் குப்பை கொட்டுவதற்கு இடமில்லாததால் சோழிங்கநல்லூர் பகுதியில் 10 பேரூராட்டசிகளுக்கு, 10 ஏக்கர் நிலமும், 30 ஊராட்சிகளுக்கு 10 ஏக்கர் நிலமும், நகராட்சிகளுக்கு 5 ஏக்கர் நிலமும் ஆக 25 ஏக்கர் நிலமும் ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ÷சென்னையை ஒட்டியுள்ள முக்கிய சாலையான பெங்களூர் – சென்னை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பையை பிப்ரவரி 15-ம் தேதிக்குள் அகற்றிவிட்டு தகவல் தர நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஆகியோருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
÷அவ்வாறு குப்பை அகற்றப்படும் இடங்களில் மீண்டும் குப்பை கொட்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சில நிறுவனங்கள் சாலைகளில் குப்பைகளை கொட்டுகின்றன. பெரும்பாலும் நள்ளிரவு நேரங்களில் இதுபோல் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
இதுபோல் குப்பைகளை யாராவது கொட்டினால் 8870803555 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.
அவ்வாறு லாரியில் கொண்டு வந்து குப்பை கொட்டும்போது பிடிபட்டாலோ, ஆதாரத்துடன் சிக்கினாலோ அந்த வாகனத்தின் உரிமம், ஓட்டுநர் உரிமம் ஆகியவை ரத்து செய்யப்படும் என்றார்.