தினமணி 04.09.2010
சிறுவர் பூங்கா சீர்திருத்தம் பெறுமா? ஓட்டை, உடைசலான உபகரணங்கள்
கோவை, செப். 3: கோவை மாநகராட்சியின் சிறுவர் விளையாட்டுப் பூங்காவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதால், விளையாடச் செல்லும் சிறுவர்கள் காயமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேரு விளையாட்டரங்கம் அருகில் சுமார் 2 ஏக்கரில் சிறுவர் பூங்கா உள்ளது.
வார நாட்களில் சிறுவர், பெரியவர் என 500 பேரும், விடுமுறை நாள்களில் 1000 பேரும் பூங்காவுக்கு வருகின்றனர். கோடை விடுமுறைகளில் 2 ஆயிரத்து 500 பேர் வரை வந்துள்ளனர். சிறியவர்களுக்கு ரூ2-ம், பெரியவர்களுக்கு ரூ 3-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பூங்கா தொடங்கியபோது இருந்த 5 வகையான விளையாட்டு உபகரணங்களைத் தவிர வேறெந்த புது உபகரணங்களும் அமைக்கப்படவில்லை.
விளையாட்டு சாதனங்கள் ஓட்டை உடைசலாகி வருவதால் பூங்காவுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இங்குள்ள 24 ஊஞ்சல்களில் 6 மட்டுமே சிறுவர்கள் விளையாடக்கூடிய நிலையில் இருக்கிறது. சிறுவர்களை அழைத்து வரும் பெற்றோர் உட்கார பெஞ்சுகள் போதுமான அளவுக்கு இல்லை. இருக்கும் பெஞ்சுகள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் கிடக்கிறது. இதனால் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் கால்கடுக்க நிற்க வேண்டியுள்ளது.
இரும்புத் தகடால் அமைக்கப்பட்டுள்ள சறுக்கு மரத்தின் மேல்பகுதி உடைந்து, ஓட்டை விழுந்துள்ளது. இங்கு விளையாட வரும் சிறுவர்களின் ஆடைகளை உடைந்த பகுதி பதம் பார்த்து விடுகிறது. விûளையாட்டு உபகரணங்களால் காயம் ஏற்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக மரம் நடுகிறோம் என்ற பேரில் பூங்காவிற்குள் சிறுவர்கள் விளையாடும் இடங்களில் தாறுமாறாக 100-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டன. அவற்றில் 15 மரக்கன்றுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இவற்றை பூங்காவின் சுற்றுச்சுவர் ஓரமாக நடவேண்டும் என்கின்றனர் இங்கு வரும் சிறுவர்களின் பெற்றோர்.
இது ஒருபுறம் இருக்க “குடி‘மகன்களின் தொல்லையும் இந்தப் பூங்காவை விட்டு வைக்கவில்லை. இப் பகுதிக்கு வரும் குடிமகன்கள் மது பாட்டில்களை பூங்காவிற்குள் வீசிவிடுகின்றனர்.
மாநகரம் முழுவதும் புதிய, புதிய பூங்காக்களை உருவாக்கி வரும் மாநகராட்சி நிர்வாகம், சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட பூங்காவில் உள்ள ஓட்டை, உடைசலான உபகரணங்களை மாற்றி புதுப்பொலிவு ஏற்படுத்த வேண்டும் என்பதே இங்கு வரும் பெரியவர்கள் மட்டுமல்ல, சின்னஞ்சிறு குழுந்தைகளின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.