தினகரன் 29.07.2010
சிவகாசி பகுதியில் நாய்களுக்கு தடுப்பூசி முகாம் துவக்கம்
சிவகாசி, ஜூலை 29: சிவகாசி நகராட்சி பகுதியில் தெரு மற்றும் வீட்டு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடும் பணிகள் நேற்று முதல் துவங்கியது. ஒரே நாளில் 85 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
சிவகாசி நகரில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நாய் தொந்தரவு குறித்து ஏராளமான புகார்கள் வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் சிவகாசியில் வெறிநாய் கடித்து 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து சிவகாசி நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூச போட முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக புதுகாலனி பகுதியில் வீடுகள் மற்றும் தெருக்களில் சுற்றி திரிந்த 85 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசியான ஆண்டி ரேபிஸ் ஊசி போடப்பட்டது.
பீப்பிள் பார் அனிமல்ஸ் என்ற அமைப்பு ஒத்துழைப்புடன் நகராட்சி பணியாளர்கள் தடுப்பூசி பணியில் ஈடுபட்டனர். ஒருவாரத்திற்கு இப்பணி நடக்கிறது. வீடுகளில் நாய்கள் வளர்போர் தங்களது நாய்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தெருவில் வெறிநாய் சுற்றி திரிந்தால் நகராட்சிக்கு உடனடியாக தகவல் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாமை சிவகாசி நகராட்சி சுகாதார அதிகாரி பாலசுப்புரமணியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முத்துமாரியப்பன், தவிட்டு ராஜன், ரவிச்சங்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.