தினமலர் 25.02.2010
சீசனுக்கு தயாராகுது நேரு பூங்கா : பராமரிப்பு பணிகளில் ‘விறுவிறு‘
கோத்தகிரி: கோடை சீசனுக்காக, கோத்தகிரி நேரு பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோத்தகிரி பேரூராட்சி பராமரிப்பில் இருந்து வந்த நேரு பூங்கா, 7 ஆண்டுகளுக்கு முன், தோட்டக்கலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு நிதியின் கீழ் 30 லட்சத்துக்கும் மேல் செலவழிக்கப்பட்டு, பூங்கா சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. இரு ஆண்டுகளாக கோடைவிழா நாட்களில் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. வரும் சீசனுக்காக, பூங்கா நுழைவு வாயில் நடைபாதை, நாற்காலி, அழகிய குடை பராமரிக்கப்பட்டு வருகிறது. பல வண்ணங்களிலான 100க்கணக்கான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
வெயிலின் தாக்கத்தில் இருந்து மலர் நாற்றுகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் – மே மாதங்களுக்குள் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர்கள் பூத்துக்குலங்கும் வகையில், தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.